Friday, 5 April 2013

சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவ மூர்த்தியாவார்

 ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை

எம்பெருமான் சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவ மூர்த்தியாவார். நாம் முன்பே கூறியதுபோல காலம், தேசம் என்று இரண்டு தத்துவங்களை அடிப்படையாக வைத்து நமது பூலோகம் இயங்குவதால் கால தத்துவத்தின் வெளிப்பாடாக அருளும் மூர்த்தியே கால பைரவ மூர்த்தியாவார். பூலோக ஜீவன்களைப் பொறுத்தவரை கால பைரவ வழிபாடும், பைரவ மூர்த்தியின் வழிபாடும் ஒரே விதமான பலன்களை அளிக்கக் கூடியதே. தேசம் அல்லது இடம் என்ற தத்துவத்தின் வெளிப்பாடாக அருளும் மூர்த்தியே க்ஷேத்திர பாலக மூர்த்தியாவார்.

கால பைரவ மூர்த்தியைப் போலவே க்ஷேத்திர பாலகரின் வழிபாடும் எதிர் காலத்தில் வளம் பெறும் என்பது சித்தர்களின் வாக்கு.

கால பைரவரின் வழிபாடு கால தேசங்களைக் கடந்த அனுகிரக சக்திகளை அளிக்க வல்லது என்னும் கோட்பாட்டை வலியுறுத்தவே சிவபெருமான் நான்கு நாய்களுடன் காசித்தல கங்கைக் கரையில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தார். ”பெத்த மனம் பித்து ….” என்றபடி பிள்ளைகள் பெற்றோர்களை மறந்து நன்றி இல்லாதவர்களாக எதிர்காலத்தில் மாறுவார்கள் என்பதை உரைப்பதற்காக நாய்களுடன் காட்சி தந்தார் எம்பெருமான்.

இதற்காகவே கால பைரவ மூர்த்தியும் நாயை வாகனமாகப் பெற்று நன்றி கெட்ட நிலை வராதிருக்க இறைவனை என்றும் மறக்காதிருக்க வரம் தரும் மூர்த்தியாக திருக்கோயில்களில் எழுந்தருளி உள்ளார்.

நாய்கள் நன்றி மறவாத பிராணிகள் என்பதோடு மட்டும் அல்லாமல் விதியை முன் கூட்டி உரைக்கும் வல்லமையும் இறையருளால் படைத்துள்ளன. நமக்கு வரக் கூடிய ஆபத்துக்களையும் பிரச்னைகளையும் மூன்கூட்டியே அறிந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வழிகாட்டுவதே கால பைரவர் வழிபாடாகும்.

சமீப காலத்தில் கால பைரவ வழிபாட்டை முறையாக நிறைவேற்றி மக்களுக்கு நல்வாழ்வு அளித்த மகானே பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆவார்கள். சித்த மரபில் வந்த இப்பெருமான் நாய்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காணாதவர். நாம் மனிதர்களுக்கு உணவிடுவதைப் போலவே இவர் நாய்களுக்கு முழு வாழை இலையைப் போட்டு சாதம், சாம்பார், ஸ்வீட், அப்பளம், பாயசம் என அனைத்து உணவு வகைகளையும் அன்புடன் பரிமாறி அனைத்து நாய்களையும் அழைப்பார்.

அவருடைய வழிபாட்டில் நிகழ்ந்த அதிசயம் என்னவென்றால் இவர் உணவு பரிமாறும் வரை எந்த நாயும் அன்னதானம் நிகழும் இடத்தில் தென்படாது. வாழை இலையில் உணவு பரிமாறி முடிந்தவுடன் இவர் கால பைரவரை பிரார்த்தித்த பின் ஒவ்வொரு நாயாக வந்து மனிதர்களைப் போலவே இலையின் முன் அமர்ந்து கொள்ளும். ஒவ்வொரு முறையும் குறைந்தது 300 நாய்களுக்குக் குறையாமல் அன்னதானம் அளிப்பது வழக்கம். இவ்வாறு அனைத்து இலைகள் முன்பும் நாய்கள் அமர்ந்த பின் சுவாமிகள் அன்புடன்  உணவை ஏற்குமாறு அந்த நாய்களை வேண்டுவார். அதன் பின்னரே இவர் அழைத்த பைரவ மூர்த்திகள் உணவை அமைதியாக ஏற்பர். அதன் பின்னர் வரும்போது வரிசையாக வந்த அதே பாணியில் வரிசையாக ஒவ்வொரு நாயாக வெளியே சென்று விடும்.

எங்கிருந்து அத்தனை நாய்கள் வந்தன, மீண்டும் அந்த நாய்கள் எங்கு சென்றன என்பது இன்று வரை எவருக்கும் புரியாத ஆன்மீக ரகசியம். மேலும் ஓரிடத்தில் இரண்டு நாய்கள் சேர்ந்தாலே அவை ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டு அங்கு கூச்சலும் சண்டையும் வந்து விடும். ஆனால், ராமலிங்க சுவாமிகளின் பைரவ பூஜையில் குறைந்தது 300 நாய்கள் இருந்தாலும் ஒரு சிறு சப்தம் கூட எழாது என்பதே பேரதிசயமாகும்.

இவ்வாறு மகான்கள் பைரவ மூர்த்தியின் வாகனமான நாய்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதிலிருந்து நாய்கள் மனித குலத்திற்கு எத்தகைய அற்புத பாடங்களை போதிக்க வல்லவை என்பது தெளிவாகின்றது அல்லவா? இதை மக்களுக்கு மௌனமாக எடுத்துரைக்கவே பைரவ மூர்த்திகள் நாய் வாகனத்தில் எழுந்தருளி உள்ளனர் என்பது அவர்களுடைய பற்பல அவதார ரகசியங்களுள் ஒன்றாகும்.

பைரவ மூர்த்தியின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாயின் வாலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆத்ம விசாரம் செய்தாலே அதன் இரகசியத்தை உணர ரிஷிகளுக்கே எட்டு சதுர்யுக காலம் தேவைப்படும் என்றால் சாதாரண மனிதர்கள் அந்த ரகசியத்தை உணர எத்தனை யுகங்கள் ஆகும்?பைரவ முகூர்த்தம்

24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. இவ்வாறு நான்கு நாழிகைகள் சேர்ந்ததே அதாவது ஒன்றரை மணி நேரமே ஒரு முகூர்த்தம் எனப்படும். இது பொதுவான கணக்கு. மேலும், முகூர்த்தம் என்பது புனிதமான காலம் என்றும் பொருள்படும். இடத்தைப் பொறுத்தும், காரியத்தைப் பொறுத்தும் முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும் என்பது உண்மையே. உதாரணமாக, சன்னியாசி என்பவர் ஒரு பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட்டின் முன்பு பிச்சை யாசிப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம். கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரமாகும். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது.

சித்தர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே. 

இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும்.

அதுபோல பைரவ முகூர்த்தம் என்ற அற்புதமான முகூர்த்த நேரம் உண்டு. சித்தர்களின் கிரந்தங்களில் மட்டுமே காணப்படும் இந்த அற்புத அமிர்த நேரத்தை முதன்முதலாக உலகிற்கு வழங்கியவரே நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்கள்.

சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று வழங்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு நாள் காலை சூரிய உதயம் 6 மணி 12 நிமிடம் என்று வைத்துக் கொண்டால் சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள நான்கு நிமிடங்களும் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நான்கு நிமிடங்களும், அதாவது 6 மணி 8 நிமிடத்திலிருந்து 6 மணி 16 நிமிடம் வரை உள்ள எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று சித்தர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற எந்த நற்காரியத்திற்கும் முகூர்த்தம் லக்ன நேரம் குறித்துதான் காரியங்களை நிகழ்த்த வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், போதிய ஜோதிட ஞானம் இல்லாதோரும் சூழ்நிலை காரணங்களால் இத்தகைய முகூர்த்த லக்னங்களில் நற்காரியங்களை நிகழ்த்த இயலாதபோது மேற்கூறிய முகூர்த்தங்கள் நற்காரிய சித்தி அளிக்கவல்லதாய் அமைகின்றன. சூன்ய திதி, அசம்பூர்ண நட்சத்திரங்கள், பகை ஹோரைகள் போன்ற பற்பல பஞ்சாங்க தோஷங்களைக் களையக் கூடிய சக்தியை உடையதே அபிஜித் போன்ற விசேஷ முகூர்த்தங்கள் ஆகும்.

இவ்வாறு பைரவ முகூர்த்த நேரத்தில் இயற்ற வேண்டிய வழிபாடுகள் ஏராளமாக உண்டு. அவ்வழிபாடுகள் நாம் காலத்தை முறையாகப் பயன்படுத்தாத தோஷங்களுக்கு ஒரளவு பரிகாரமாக அமைகின்றன. சித்தர்கள் அருளிய பைரவ முகூர்த்த நேரத்தைக் குறிப்பதே பைரவ மூர்த்திகளின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாய்களின் வால் பகுதியாகும். எந்த அளவிற்கு பைரவ மூர்த்திகளின் வாகனங்களின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகளை மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு பைரவ முகூர்த்தத்தைப் பற்றிய ரகசியங்களை நாம் தெரிந்து உணர்ந்து அதை நற்காரிய சித்திக்குப் பயன்படுத்த முடியும் என்பது சித்தர்களின் அறிவுரை,

பைரவ வாகனத்தின் வால் பகுதியில் அப்படி என்ன விசேஷம் விரவி உள்ளது? பைரவ வாகனம் என்பது தர்ம தேவதையே. எம்பெருமானின் வாகனமான நந்தி மூர்த்தியாகவும் தர்ம தேவதை எழுந்தருளி உள்ளது நாம் அறிந்ததே. கிருத யுகத்தில் நான்கு கால்களில் திரமாக நின்ற தர்ம தேவதை தற்போதைய கலியுகத்தில் ஒரே ஒரு காலில் மட்டும்தான் நிற்கின்றது. எனவேதான் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற தகாத நிகழ்ச்சிகளையே நாம் சந்திக்கிறோம்.

இத்தகைய தகாத நிகழ்ச்சிகள் நம்மைத் தாக்காது நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தர்ம தேவதையின் ஆசீர்வாத சக்திகளை நாம் பெற்றாக வேண்டும். கலியுகத்தில் பூமியில் நிலை கொண்டிருக்கும் தர்ம தேவதையின் நாலாவது கால்தான் பைரவ வாகனத்தின் வால் பகுதியாகும். நாம் பைரவ வாகனத்தின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகள் இயற்றும் அளவிற்கு நாம் தர்ம தேவதையின் அனுகிரக சக்திகளைப் பெற்றவர்கள் ஆகிறோம்.

பைரவ வாகனத்தில் வால் பகுதியைப் பொறுத்து பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளும் பலவிதமாய் பரிமாணம் கொள்கின்றன.

உதாரணமாக,
 1. பைரவ வாகனத்தின் வால் பகுதி சுருட்டிக் கொண்டு வட்ட வளையம் போல் இருக்கும். இந்த பைரவ மூர்த்திகள் தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்றழைக்கப்படுகின்றனர். பூமி சூரியனைச் சுற்றும் கால அளவை இந்த பைரவ மூர்த்திகள் நிர்ணயிப்பதால் இரவில் செய்ய வேண்டிய காரியங்கள், பகலில் செய்ய வேண்டிய காரியங்கள் போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்கள், அவற்றால் ஏற்படும் கால தோஷங்கள் இவற்றை இத்தகைய பைரவ மூர்த்திகள் களைகிறார்கள்.

 2. கணவன் மனைவி இவர்களுக்கு இடையே உள்ள தாம்பத்திய உறவிற்கு இரவு நேரமே ஏற்றது. பகல் நேர புணர்ச்சி நரம்புக் கோளாறுகளையும் சந்ததிகளின் அவயவ குறைபாடுகளையும் தோற்றுவிக்கும்,

  அதே போல பகலில் தூங்குவதும் உட்கார்ந்த, நின்ற நிலையில் தூங்குவதும் உடல் நலத்திற்கு உகந்ததன்று. இரவு நேர எண்ணெய்க் குளியலும் ஆரோக்கியத்தை அளிக்காது.

  இரவு நேரப் பயணங்களும், இரவில் நெடு நேரம் கண் விழித்லும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

  இது போன்ற பகலிரவு கர்ம மாறுபாடுகளில் ஏற்படும் தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்வதே தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் வழிபாடாகும்.

 3. பைரவ வாகன மூர்த்திகளின் வால் பகுதி கொடியைப் போல் மேல் பகுதியில் வளைந்திருக்கும். இத்தகைய வாகனங்களை உடைய பைரவ மூர்த்திகள் தர்மக் கொடி பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். பதவி, செல்வாக்கு, பணம், ஆரோக்கியம் போன்ற நிலைகளில் உயர் நிலையிலிருந்து விதி வசத்தால் தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே தர்மக் கொடி பைரவ மூர்த்தி ஆவார்.


 4. நீதிபதிகள், ஆட்சியாளர்கள், மந்திரிகள் திடீரென்று பல்வேறு காரணங்களால் தங்கள் பதவியை இழந்து வாடும்போது அவர்களை இதுவரை அண்டியிருந்த நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மறைந்து விடுவார்கள். இது அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்ச்சியாகும். ஆனால், இத்தகைய துன்பங்களால் பாதிக்கப்படும்போதுதான் அதன் உண்மை வேதனை புரிய வரும். இத்தகைய எதிர்பாராத துன்பங்களைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே, தர்மக் கொடி பைரவர் ஆவார், மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வல்லதே தர்மக் கொடி பைரவ மூர்த்தியின் வழிபாடாகும்.

 5. பைரவ மூர்த்திகளின் வாகனங்கள் வலது புறம் நோக்கியும் இடது புறம் நோக்கியும் பார்த்தவாறு அமைவதுண்டு. பைரவ மூர்த்திக்கு இடது புறம் பார்க்கும் வண்ணம் வாகனம் அமைந்த மூர்த்தி ஆடபீஜ பைரவ மூர்த்தி என்றும், பைரவ மூர்த்திக்கு வலப் புறம் பார்க்கும் வண்ணம் அமைந்த வாகனத்தை உடையவர் மகபீஜ பைரவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

  எண்ணிக்கை குறைவு, அடர்த்திக் குறைவு போன்ற விந்துக் குற்றங்களால் அவதியுற்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் மகபீஜ பைரவ மூர்த்திகளை செவ்வாய், வியாழக் கிழமைகளில் வழிபடுவதால் நற்சந்ததிகள் இறைப் பிரசாதமாக கிட்ட வாய்ப்புண்டு.

  இரத்தச் சோகை, கர்பப்பை கோளாறுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் ஆடபீஜ பைரவ மூர்த்திகளை வெள்ளிக் கிழமைகள் தோறும் வணங்கி வழிபடுவதால் நற்குணம் மிக்க குழந்தைகளைப் பெற இறைவன் அருள் புரிவார்.


 6. வாகனம் ஏதுமின்றி அருள்புரியும் பைரவ மூர்த்திகளும் உண்டு. இவர்கள் சுதர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். எவ்வளவோ படிப்பு, புத்திசாலித்தனம் போன்ற நல்ல தகுதிகளைப் பெற்றிலிருந்தாலும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிட்டாமல் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோர் இத்தகைய பைரவ மூர்த்திகளை வணங்கி வழிபடுவதால் படிப்பு, அறிவுத் தகுதிகளுக்கு ஏற்ற நல்ல வேலைகள் அமையும்.
காலத்தைக் கணிக்கும் வழி

ஒரு மனிதன் எப்படிக் காலத்தைக் கணிக்க வேண்டும். கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் இக்கேள்வியின் பின்னால் ஆழ்ந்த கருத்து உண்டு. எல்லோரும் கடிகாரத்தை வைத்துத்தானே காலத்தைக் கணக்கிட வேண்டும் என்று பதில் கூறுவர். உண்மையில் கடிகாரம், மர நிழல், சூரியனின் இயக்கம் போன்ற எந்த வெளிப்படையான உபகரணங்களை வைத்தும் காலத்தை கணக்கிடுவது உண்மையான ஆன்மீகம் அல்ல என்பதே சித்தர்களின் கூற்று. நமது முன்னோர்கள் காலத்தை எப்படிக் கணக்கிட்டனர்.

ஒரு நாளின் பகல் பொழுதை எட்டு முகூர்த்தங்களாகவும் இரவு நேரத்தை எட்டு முகூர்த்தங்களாகவும் கணக்கிட்டனர். ஒரு முகூர்த்தத்திற்கு ஒன்றரை மணி நேரம் என்றால் 16 முகூர்த்த நேரத்திற்கு 24 மணி நேரமான ஒரு நாள் அமைந்தது. இந்த ஒன்றரை மணி நேர முகூர்த்தத்தை அவர்கள் அளப்பதற்கு எந்தக் கருவியை வைத்திருந்தார்கள்?

ஒவ்வொருவரும் தங்கள் மூச்சின் அளவைக் கொண்டுதான் அக்காலத்தில் கால அளவைக் கணக்கிட்டார்கள். இதுவே உண்மையான கால அளவு கோல். நாம் உறங்கினாலும் உறங்காவிட்டாலும் நின்றாலும் நடந்தாலும் சுவாசித்துக் கொண்டேதான் இருக்கிறோம், இந்த சுவாசம் காலையில் நாம் எழுந்தவுடன் பொதுவாக வலது நாசியில் ஆரம்பிக்கும். ஒரு முகூர்த்த நேரம் கழித்து அதாவது ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் இடது மூக்கிற்கு மாறும். அடுத்த முகூர்த்தத்தில் வலது நாசிக்கு மாறிவிடும்.

அக்காலத்தில் நமது முன்னோர்கள் ஒரு நாளின் நேரத்தை இவ்வாறு தங்கள் நாசியில் ஓடூம் சுவாசத்தின் போக்கை வைத்துதான் நேரத்தைக் கணக்கிட்டார்கள். மேலும் ஒவ்வொரு முகூர்த்தத்திலும் நான்கு பூதக் கலைகள் மாறி மாறி சுழன்று வரும். அதாவது பிருத்பி, அப்பு, அக்னி, வாயு என்ற வரிசையில் ஒவ்வொரு பூதக் கலையுடைய சுவாசமும் ஒரு நாழிகை நேரத்திற்கு அதாவது 24 நிமிடங்களுக்கு நிரவி நிற்கும்.

ஒவ்வொரு சுவாசக் கலையிலும் செய்ய வேண்டிய காரியங்களை நம் முன்னோர்கள் தங்கள் சற்குரு நாதர்கள் மூலம் தெளிவாக தெரிந்து வைத்திருந்தனர். உதாரணமாக, வலது நாசி சுவாசத்தில் மலம் கழிப்பதும், இடது நாசி சுவாசத்தில் சிறுநீர் கழிப்பதும், நீர் அருந்துவதும் நலம், ஆண்கள் வலது நாசி சுவாசத்திலும், பெண்கள் இடது நாசி சுவாசத்திலும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது ஆரோக்கியமுள்ள சந்ததிகளைத் தோற்றுவிக்க வழி வகுக்கும்.

ராம பாணத்தைத் தடுக்க எவராலும் இயலாது என்பது அனைவரும் அறிந்ததே. காரணம் ராம பிரான் தன்னுடைய ஒவ்வொரு பாணத்தையும் வலது சுவாசத்தில் பிருத்வி பூதம் நிலை கொள்ளும்போது விடுத்ததே ஆகும்.  சூரிய கலையில் பிருத்வி பூதம் நிலை கொண்டால் அப்போது எழும் பாணத்தை யாராலும் தடுக்க இயலாது என்று தனுர் வேதம் உறுதி அளிக்கிறது.

இவ்வாறு நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையை நம்முடைய சுவாசத்துடன் ஐக்கியப்படுத்திக் கொள்வதுதான் உண்மையான கால பைரவ வழிபாடாகும். பைரவ மூர்த்தங்கள் அஷ்ட பைரவ மூர்த்திகள் என எட்டு வடிவங்களில் திகழ்கிறார்கள் அல்லவா? சீர்காழி, திருக்குற்றாலம் சித்திரசபை, திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் இத்தகைய அஷ்ட பைரவ மூர்த்திகளின் திருஉருவங்களைத் தரிசிக்கலாம்.

துடையூர் திருத்தல
தர்ம சக்கர பைரவ மூர்த்தி
பகலிலும் இரவிலும் நிரவி நிற்கும் எட்டு முகூர்த்தங்களுக்கும் ஒவ்வொரு முகூர்த்தத்திற்கும் ஒரு மூர்த்தியாக இந்த அஷ்ட பைரவ மூர்த்திகள் அதிபதியாகத் திகழ்கின்றனர். அந்தந்த முகூர்த்தத்திற்கு உரிய பைரவ மூர்த்தியை முறையாக வழிபட்டு வந்தால் அதுவே சிறந்த அஷ்ட பைரவ வழிபாடாக மலரும்.

மேலும் எந்த அளவிற்கு கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் கணக்கிடும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய ஆயுள் குறையும் என்பது உண்மை. கேட்பதற்கு விந்தையாகத் தோன்றினாலும் இதுவே உண்மை என்பதை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ளலாம். நாம் தினசரி காலை 10 மணிக்கு அலுவலகம் செல்வதாக வைத்துக் கொள்வோம். அதற்காக ஒருவர் 9 மணிக்குள் பஸ்சை பிடித்தால்தான் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியும் என்றிருந்தால் அவர் காலை எழுந்ததிலிருந்து பல் துலக்குதல், குளித்தல், பூஜை செய்தல், உணவு ஏற்றல் என்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே செய்யும்போது அவரையும் அறியாமல் அவருடைய மூச்சின் வேகம் அதிகரிக்கிறது.

இதனால் ஒரு நிமிடத்தில் விடும் மூச்சுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவருடைய ஆயுள் ஓரளவு நாளடைவில் குறைந்து விடும். வருடம், மாதம் என்ற கணக்கில் நமது ஆயுள் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவருடைய ஆயுளும் இத்தனை ஆயிரம், லட்சம் சுவாசம் என்ற கணக்கில்தான் இறைவனால் நிச்சயிக்கப்படுவதால் எந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழும் நம் சுவாசத்தின் எண்ணிக்கை குறைகிறதோ அந்த அளவிற்கு நமது ஆயுளும் வளரும் என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறது அல்லவா?

மனிதன் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 15 முதல் 20 மூச்சுகள் விடுகிறான். ஆனால், நான்கு நிமிடத்திற்கு ஒரு முறையே சுவாசிப்பதால் அது ஆயிரம் வருடத்திற்கு அமைதியாக உயிர் வாழ்கிறது.

சில வகை ஆமைகள் பத்தாயிரம் வருடங்கள் கூட உயிர் வாழும் தன்மை உடையவை. அவை தங்கள் தலையை வெளியே இழுப்பதற்கு இரண்டு ஆண்டுகளும், தாங்கள் கால்களை வெளியே வைப்பதற்கு ஐந்து ஆண்டுகளும் எடுத்துக் கொள்ளும் என்றால் அவைகளின் சுவாசம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு ஒரு நாளில் நாம் நிறைவேற்ற வேண்டிய காரியங்களை வைத்து மட்டும் நமது காலத்தை அளக்க, வாழ்வை நடத்த பழகிக் கொண்டால் சுவாசம் சீராக இயங்கும், அதனால் ஆயுள் வளரும் என்பதே சித்தர்ளின் அறிவுரை,

அதாவது, காலை ஆறு மணிக்கு எழ வேண்டும், ஏழு மணிக்கு குளிக்க வேண்டும், எட்டு மணிக்கு சாப்பிட வேண்டும், ஒன்பது மணிக்கு பஸ் பிடிக்க வேண்டும் என்ற மணிக் கணக்கு வாழ்க்கையை விடுத்து, காலையில் சூரிய உதய நேரத்தில் எழ வேண்டும், அதன் பின் குளித்து, பூஜை செய்து விட்டு, உணவருத்திய பின் பஸ் பிடித்து அலுவலகம் செல்ல வேண்டும் என்ற காரிய அட்டவணையை மட்டும் நாம் கருத்தில் கொண்டு செயல்பட்டால் எந்த வித ஆர்ப்பாட்டம், ஆரவாரமின்றி நமது வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடைபோல் தவழும் என்பது நமது பெரியோர்கள் கண்ட உண்மை. ஆரம்பத்தில் இது நடை முறைக்கு ஒத்து வராததுபோல் தோன்றினாலும் விடாமுயற்சியுடன் இம்முறையை மேற்கொண்டு செயல்படுத்தினால் நிச்சயம் அமைதி தவழும் உலகம் உங்களுக்காக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த காரிய அட்டவணையை கருத்தில் கொண்டு செயல்படுத்திய பின் நமது சுவாசக் காற்றை ஆதாரமாக வைத்து நமது காரியங்களைச் செயல்படுத்தும் வித்தையை எளிதாகக் கற்றுக் கொண்டு விடலாம். இந்த முகூர்த்தத்தில் இந்த பூத தத்துவத்தில் இந்தக் காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து அக்குறிப்பிட்ட காலத்தில் அதை நிறைவேற்றி விடலாம். அவ்வாறு காரிய அட்டவணையை சுவாச சுழற்சியின் அட்டவணையின் பின்னணியில் நீங்கள் செயல்படுத்தும் முறையை அறிந்து கொண்டால் அப்போது காலம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். அதாவது நீங்கள் காலத்தைக் கட்டுப்படுத்தலாம், காலம் உங்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாது,

இந்த அற்புதத்தை நடைமுறையில் நடத்திக் காட்டியவர்களே நமது ரிஷிகளும் யோகிகளும். மகாபாரத யுகத்தில் திதி என்னும் காலக் கோட்பாடான அமாவாசையை ஸ்ரீகிருஷ்ண பகவான் இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் மாற்றி அமைத்தார்.

இவ்வாறு காலத்தின் கட்டுப்பாட்டைக் கடந்தவர்களே காலத்தை உருவாக்க முடியும், பகல் இரவை மாற்றி அமைக்க முடியும். இந்த வித்தையை அறிந்ததால்தான் பராசரர் பகல் நேரத்தில் இரவு காலத்தைத் தோற்றுவித்து தன்னுடைய தபோ பலனை வியாச பகவான் உருவத்தில் உலகிற்கு தாரை வார்த்துக் கொடுத்தார். 

தற்போது நம்மிடையே இமயமலைச் சாரலில் இன்றும் இளமையுடன் உலவும் அவதூது பாபாவும் காலத்தைக் கடந்த யோகியே. பகல் இரவைத் தோற்றுவிக்கக் கூடியவர், கால சுழற்சியை மாற்றும் வல்லமை படைத்தவர்.

இவ்வாறு காலத்தைக் கட்டுப்படுத்தும் வித்தை கேட்பதற்குச் சுவையாக, எளிமையாகத் தோன்றினாலும் நடைமுறையில் மிகவும் கடினம் என்று பலரும் கருதுவதால் கால பைரவ வழிபாட்டை உலகிற்கு ரிஷிகள் அளித்துள்ளனர். தர்ம தேவதையான நாயை வாகனமாகக் கொண்ட பைரவ மூர்த்தியை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் காலத்தை வெல்லும் வித்தையை நமக்கு சுவாமி அறிவுறுத்துவார்.

நமது வெங்கடராம சுவாமிகள் மட்டும் அல்லாது பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், மாயம்மா, விசிறி சுவாமிகள், கசவனம்பட்டி சித்தர், சுவாமி சிவானந்தா போன்ற பலரும் நாய்களுக்கு உணவிட்டு காலத்தை வெல்லும் வித்தையை அவ்வப்போது தமது அடியார்களுக்கு உணர்த்தி வந்தனர்.

மேலும் விரைவாக அருகி வரும் வேத சக்திகள் தழைப்பதற்கு உறுதுணை செய்வதும் பைரவ வழிபாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோருக்கும் வேதம் ஓதுதல் என்பது சாத்தியமானது கிடையாது. ஆனால், யாராக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் பைரவ மூர்த்தியை வழிபடுவதும நாய்களுக்கு உணவிடுவதும் சாத்தியமானதே. இதனால் வேத சக்திகள் பெருகி உலகில் தர்மம் கொழிக்கும். இவ்வுண்மையை உணர்த்தவே வேதநாயகனான சிவபெருமான் நான்கு வேதங்களை நான்கு நாய்களாக்கி ஆதி சங்கரருக்கு காசியில் வேதத்தின் உண்மைப் பொருளை விளக்க வந்தார்.


குழஅழகு பைரவ பூஜை

கலியுலகில் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் கருவியே பணம் என்னும் மாயையாகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த மாயையை எவராலும் வெல்ல முடியாது என்பதை அறிந்த சித்தர்கள் பணம் என்னும் மாயையை வெல்ல முடியாவிடினும் அந்த மாயையை வைத்து நற்காரியங்களை செயலாற்றும் வித்தையை தங்களை அண்டி வரும் அடியார்களுக்கு போதித்து வருகின்றனர்.
இம்முறையில் கால பைரவ வழிபாடு பணத்தை முறையாக சம்பாதிக்கும் வழிமுறையையும் அவ்வாறு முறையாக சம்பாதித்த பணத்தை முறையான தெய்வீக காரியங்களில் செலவு செய்யும் மார்கத்தையும் புகட்டுகிறது. அந்த அற்புத மார்கத்தையே சித்தர்கள் குழஅழகு பைரவ பூஜையாக அளித்துள்ளார்கள்.

தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரின் பூஜை மகத்துவம் பெற்றுள்ளது போல் வளர் பிறை அஷ்டமி திதியில் மக்கள் நிறைவேற்ற வேண்டிய பூஜையே குழஅழகு பைரவ பூஜையாகும். மக்கள் அனைவருக்கும் பணம் என்பது அத்தியாவசியமான ஒரு பொருளாக இருந்தாலும் வியாபாரிகளுக்கு பணம் என்பது மிகவும் அவசியமானதுதானே? அதனால் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடையும் சில குறித்த தேவதை தெய்வங்களை உபாசித்தல் நலம்.

வியாபாரம் என்பது செல்வ விருத்தி என்னும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதால் தன விருத்திக்கு சக்தி வழிபாடே அதாவது பெண் தேவதைகள் தெய்வங்களின் வழிபாடே உகந்ததாகும். அதிலும் குறிப்பாக துணி வியாபாரம் செய்பவர்களும், தறி உரிமையாளர்களும் ஐஸ்வர்ய லட்சுமியை உபாசனை செய்வது நலம்.

துணி நெய்யும் நூல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும், கைத்தறி ஜவுளி தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களும் பேச்சியம்மன் என்னும் பத்தினி தெய்வத்தை வழிபடுதல் நலம். பேச்சியம்மன் என்பது வெறும் காவல் தெய்வம், எல்லை தெய்வம் என்னும் எண்ணத்தை விடுத்து பராசக்தியின் வாக்தத்துவமாக விளங்கும் தெய்வமே பேச்சியம்மன் என்பதை உணர்ந்தால்தான் வழிபாட்டின் பலன் பூர்ணத்துவம் பெறும்.

திருநெல்வேலியை அடுத்துள்ள இசக்கி அம்மன் என்னும் தெய்வம் புளி வியாபாரிகளுக்கு உரிய தேவதையாக போற்றப்படுகிறாள். புளி மண்டி உரிமையாளர்களும் புளி உற்பத்தி தொழிலாளர்களும் வணங்க வேண்டிய தேவதையே இசக்கி அம்மன் ஆவாள்.

பலரும் மனைவி, குழந்தைகளுக்காக அல்லும் பகலும் உழைத்து தங்களுக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாது அனைத்தையும் தங்கள் குடும்பத்திற்காகவே செலவிட்டு விடுவர். இத்தகையோரில் பலரும் கடைசி காலத்தில் ஆதரவற்ற நிலையில் உண்ண உணவும், இருக்க இடமும் கூட இல்லாமல் பரிதவிக்கும் நிலையில் வாட நேரிடும்போது இவர்களை அரவணைக்கும் தெய்வமே இசக்கி அம்மன் ஆவாள்.

கடைசி காலத்தில் நிராதரவான நிலையில் உள்ள முதியவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் வாய் திறந்து இசக்கி அம்மனை நோக்கி கதறி அழுதால் அவர்கள் எங்கிருந்து அழைத்தாலும் அவர்கள் குறையை உரியவர்களை அனுப்பி குறை தீர்க்கும் தெய்வமே இசக்கி அம்மன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு பத்தினி தெய்வங்களையும் பெண் தெய்வங்களையு வழிபட உகந்த திதியே வளர்பிறை சப்தமி திதியாகும். வளர்பிறை சப்தமி திதியில் சக்தி வழிபாட்டை முடித்து வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவ வழிபாட்டை நிறைவு செய்வதே குழஅழகு பைரவ வழிபாடு என்று வழங்கப்படுகிறது.

குழஅழகு பைரவ வழிபாட்டை கலியுக மக்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்த பெருந்தகையே பகலவ முனிவர் ஆவார். இப்பெருமான்தான் இரவு ராகு கால நேரத்தையும் நம் நல்வாழ்விற்காக அறிவித்தவர். பகல் ராகு கால நேரத்தில் துர்கா தேவியின் வழிபாடும், சரபேஸ்வரரின் வழிபாடும் சிறப்புறுவதுபோல இரவு நேர ராகு காலத்தில் பேச்சியம்மன், இசக்கி அம்மன் போன்ற பத்தினி தெய்வங்களின் வழிபாடும் பைரவ வழிபாடும் சிறப்பு பெறுகிறது.

No comments:

Post a Comment