Sunday, 31 March 2013

sri lakshmi swarnabhairavar
பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்)

அம்மன்/தாயார்:-


தல விருட்சம்:-


தீர்த்தம்:-


ஆகமம்/பூஜை :சிவாகமம்


பழமை :500 வருடங்களுக்கு முன்


புராண பெயர்-


ஊர் :பரக்கலக்கோட்டை


திருவிழா:
கார்த்திகை சோமவாரம், தைப்பொங்கல்.


தல சிறப்பு :
பகலில் கோயில் திறக்காமல் திங்கட்கிழமை அன்று மட்டும் நள்ளிரவில் கோயில் திறக்கப்படுகிறது. இங்கு அம்பாள் கிடையாது. சிவன் வெள்ளால மர வடிவில் காட்சி தருகிறார். தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம்.


திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
நிர்வாக அதிகாரி, பொதுஆவுடையார் கோவில், பரக்கலக்கோட்டை- 614 613 தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:+91- 4373 - 283 295, 248 781.


பொது தகவல்:


சுவாமிக்கென தனி விமானம் எதுவுமில்லை. மரத்தின் வடிவில் அருளும் சிவபெருமானுக்கு, மரத்தின் இலைகளும், கிளைகளுமே விமானமாக இருக்கிறது. மூலஸ்தானத்திலேயே சுவாமிக்கு முன்புறத்தில் கஜலட்சுமி காட்சி தருகிறாள். அருகிலேயே இரண்டு யானைகளும் வைக்கப்படுகிறது.
சிவனுக்கு பூஜை செய்யும்போது, இவளுக்கும் சேர்த்தே பூஜைகள் நடக்கிறது. இங்கு சிவனே பிரதான மூர்த்தியாக இருப்பதால், இங்கு அம்பிகை, சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர், பைரவர் என எந்த பரிவார மூர்த்திகளும் இங்கு கிடையாது. கோயிலுக்கு வெளியில் வீரசக்தி விநாயகர், பெத்த பெருமாள் (காவல் தெய்வம்) சன்னதி மட்டும் இருக்கிறது. இந்த விநாயகர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். வான் கோபர் அலங்காரத் துடனும், மகா கோபர் துறவி கோலத்திலும் ஒரு புளிய மரத்தின் கீழ் சிலை வடிவில் இருக்கின்றனர்.
திங்கட்கிழமையன்று நள்ளிரவில் பூஜை முடிந்து தரிசனத்திற்காக சன்னதி நடை திறந்த பின்பு, சுவாமியை தரிசிக்க வந்த ஊர்க்காரர்களில் யார் வயதில் முதிர்ந்தவராக இருக்கிறாரோ அவருக்கு, சிவனுக்கு அபிஷேகம், பூஜை செய்த பிரசாதங்கள் கொடுத்து முதல் மரியாதை செய்கின்றனர். அப்போது அவரிடம் ரூ.1 மட்டும் காணிக்கையாக வாங்குகிறார்கள். இதனை, ""காளாஞ்சி' என்கிறார்கள்.
நள்ளிரவில் சுவாமிக்கான அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, பக்தர்களுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்த சந்தனம், மற்றும் வெற்றிலை, பாக்கு தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. கோயில் சார்பில் பணியாளர் ஒருவர் இவ்வாறு பக்தர்களுக்கு கொடுக்கிறார். அதன்பின், விடிய,விடிய அன்னதானம் நடக்கிறது.


பிரார்த்தனை


இங்கு அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற வேண்டிக்கொள்ளலாம்.


நேர்த்திக்கடன்:


பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.


தலபெருமை :


ஆலமர சிவன்: ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (லிங்கம்) வழிபடப்பெறும் சிவபெருமான், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார். எனவே, இங்கு லிங்க வடிவம் கிடையாது. கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர். அப்போது சன்னதிக்குள் மரத்தை காணமுடியாதபடி சுற்றிலும் வெண்ணிற துணியால் மறைத்துவிடுகிறார்கள். நமக்கு லிங்க சொரூபம் மட்டுமே தெரிகிறது.
மூலஸ்தானத்திற்குள் ஆல மரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சிவபெருமான், முனிவர்களுக்கும் காட்சி தந்ததன் அடையாளமாக பாதம் வைக்கப்பட்டிருக்கிறது.
நள்ளிரவு மட்டும் தரிசனம்: இக்கோயிலில் பகலில் நடை திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மட்டும் இரவில் நடை திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். அன்றிரவில் 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கிறது. அப்போது சுவாமியை தரிசிக்க முடியாதபடி திரையிடப்படுகிறது. அதன்பின் 11.30க்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்திவிட்டு, பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சன்னதி திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களின் தரிசனம் முடிந்தபின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்திவிடுகின்றனர்.
தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம்.
இதுதவிர, சிவனுக்குரிய சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை.


குரு தலம்: சிவனின் குரு அம்சமான தெட்சிணாமூர்த்தி, சிவன் கோயில்களில் கோஷ்ட சுவரில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். இத்தலத்தில் சுவாமியே ஆலமரத்தின் வடிவில் அருளுகிறார். எனவே, இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். இங்கு சிவனாக கருதப்படும் அரசமரத்தின் இலையே பிரதான பிரசாதமாக தரப்படுகிறது. பக்தர்கள் இந்த இலையைக் கொண்டு சென்று வீட்டில் வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதும், விவசாய நிலங்களில் இட்டால் விவசாயம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.
இக்கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செயல்கிறார்கள்.
திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.

விளக்குமாறு காணிக்கை: இக்கோயிலில் பெண்கள் முடி வளருவதற்காக விளக்குமாறை காணிக்கையாக செலுத்துகின்றனர். தென்னங்கீற்றில் உள்ள குச்சிகளை, தங்களது கையால் விளக்குமாறாக செய்து இவ்வாறு காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் தென்னங்கீற்று போலவே முடி வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு கிடைக்கும் விளக்குமாறுகளே ஆயிரக்கணக்கில் குவிந்துவிடும் என்கிறார்கள்.
இத்தலத்தில் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறப்பெற்றவர்கள் இக்கோயிலுக்கு அதிகளவில் காணிக்கை செலுத்துகின்றனர்.
கார்த்திகை சோமவாரத்தின்போது பக்தர்கள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், உளுந்து, பயிறு, எள் முதலிய அனைத்து தானியங்களையும், வீட்டு உபயோகப்பொருட்கள், வஸ்திரங்கள், அலங்கார பொருட்கள் என எளிய தவிட்டில் (நெல் உமி) இருந்து தங்கக்காசு வரையிலும் அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு கோயிலுக்கு செலுத்தப்படும் காணிக்கைகள் பெறுவதற்காகவே, பிரம்மாண்டமான பந்தல்கள் போடப்படுகிறது.


தல வரலாறு:


வான் கோபர், மகா கோபர் என்ற இரு முனிவர்களுக்கு ""இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?'' என சந்தேகம் வந்தது. தங்களுக்கு தீர்ப்பு சொல்லும்படி இருவரும் சிதம்பரம் சென்று நடராஜரிடம் வேண்டினர். அவர் இத்தலத்தில் காத்திருக்கும்படி சொல்லி, தான் அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதாக கூறினார். அதன்படி இத்தலம் வந்த இரு முனிவர்களும் புளிய மரத்தின் கீழ் அமர்ந்தனர்.
சுவாமி ஒரு கார்த்திகை மாத, திங்கட்கிழமையன்று சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பிறகு இங்கு வந்து ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று இருவருக்கும் பொதுவாக, ""இல்லறமாயினும், துறவறமாயினும் நல்லறமாக இருந்தால் இரண்டுமே சிறப்பு,'' என்று பொதுவாக தீர்ப்பு கூறிவிட்டு, பின்பு வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார்.
தீர்ப்பு சொல்வற்காக வந்த சிவன் என்பதால் இவர் "பொது ஆவுடையார்' என்றும், "மத்தியபுரீஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.


சிறப்பம்சம்::


அதிசயத்தின் அடிப்படையில்: பகலில் கோயில் திறக்காமல் திங்கட்கிழமை அன்று மட்டும் நள்ளிரவில் கோயில் திறக்கப்படுகிறது. இங்கு அம்பாள் கிடையாது. சிவன் வெள்ளால மர வடிவில் காட்சி தருகிறார். தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம்.

Wednesday, 27 March 2013

ஸ்ரீ பஞ்சநத பாவா நிர்விகல்ப சமாதி


தஞ்சை ராஜதானி.  மராட்டியர் ஆட்சிக் காலத்தில் 215 ஆண்டுகளுக்கு முன் -

1787 க்கும் 1798 க்கும் இடைப்பட்ட  காலத்தின் ஒருநாள்.

அதுவும் ஐப்பசி மாதத்தின் அடைமழை நாள். இடைவெளியின்றி - இடி மின்னல் இன்றி - பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து நல்ல மழை!...

''...அது கெட்ட மழையாகி விடக்கூடாதே!...'' என்று பெருங்கவலையுடன் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்தார் மன்னர் அமர்சிங். மழைச்சாரல் மன்னரின் முகத்தில்  சில்லென - பரவிற்று. 

அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த செய்திகள் கூட - இந்த சில தினங்களில் தடைப்பட்டு விட்டது. காரணம் காவிரியின் வடக்கில் கொள்ளிடத்திலும் தெற்கில் குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாற்றிலும் கரை தழுவி ஓடும் வெள்ளம்.

கரை மீறிய வெள்ளப் பெருக்கு எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற நிலை. இதோ கண்ணுக்கு  எட்டிய வடவாற்றில் கூட மழை நீர் பொங்கிப் பிரவாகமாக ஓடுகின்றது.
மன்னரின் முகத்தில் கவலையின் ரேகைகள்.  
''... அஞ்சவேண்டாம். தஞ்சையின் கிழக்கே நாகப்பட்டினம் முதற்கொண்டு கோடியக்கரை தென்கிழக்கே சேதுபாவாசத்திரம் வரை கடல் கொந்தளிக்கவோ சூறாவளி சுழற்றியடிக்கவோ வாய்ப்புகள் ஏதுமில்லை...''
மன்னனின் மனதையும் - வானிலையையும் ஆராய்ந்த வல்லுனர்கள் சொன்னார்கள். இருப்பினும் மன்னன் அமர்சிங் அமைதி கொள்ளவில்லை. 
மன்னர் அருந்துவதற்கென்று - மழைச்சாரலின் குளுமைக்கு இதமாக, விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட வெதுவெதுப்பான மூலிகை ரசம் வந்தது. அதை நிராகரித்த மன்னர் - ''அமைச்சரை வரச்சொல்லுங்கள்'' -  என்றார்.
அடுத்த அரை விநாடியில் அரசரின் அருகில் அமைச்சர்.
'' உடனடியாக தஞ்சைக்கு வடக்கே உள்ள நிலவரம் தெரிய வேண்டும்!...'' 
'' உத்தரவு..'' - தலை வணங்கிய அமைச்சர் பலவகையிலும் திறமையான ஆட்கள் உடன் வர - தஞ்சை மாநகரின் வட எல்லையில், வடவாற்றினை நெருங்கினார்.  
மாமன்னன் ராஜராஜசோழனின் ஆன்மீக குருநாதராகிய கருவூர் சித்தரின் திருவாக்கினால் புகழப்பெற்ற ஆறல்லவா வடவாறு!... சற்று சிணுங்கலுடன் நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. மிதமாக - மழை பெய்து கொண்டு இருந்தது.
ஓடக்காரர்கள் தயாராக நின்றார்கள். வடவாற்றின் தென்கரையில் சற்று தொலைவில் - திருக்கோயில் கொண்டிருந்த அமிர்தவல்லி அம்பிகை சமேத சிதானந்தேஸ்வர ஸ்வாமியை  கைகூப்பி, கண்களை மூடித் தொழுதார். 
கண் விழித்தவருக்கு பெரும் அதிர்ச்சி. காண்பது கனவா!... இதுவரைக்கும் காணப்படாத இவர் - இப்போது எப்படித் தோன்றினார்?... எங்கிருந்து வந்தார்?...
மழை நீர் தழுவிச் செல்லும் வடவாற்றின் தென்கரைப் படித்துறையில், மழையில் நனைந்தபடி தவக்கோலத்தில் - சிவயோகத்தில் அமர்ந்திருந்த பெருந்துறவி ஒருவரைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர்.
வடவாறு வற்றினாலும் வற்றாத - கருணை வெள்ளத்தினை அவர் திருமுகத்தில் கண்டனர். அமைச்சரின் முகக்குறிப்பினை உணர்ந்த பணியாளர்கள் -  பெரிய குடை ஒன்றினை மழையில் நனையும் துறவிக்கு ஆதரவாகப் பிடித்தனர். தவநிலை தடைப்பட்டது. 
துறவியார் மெல்ல கண் விழித்தார். அமைச்சரும் மற்றவர்களும் அவருடைய பாதம் தொட்டு வணங்கினார்கள். துறவியார் திருவாய் மலர்ந்தருளினார்.
''...அஞ்ச வேண்டாம்!... எந்தத் தீங்கும் நேராது. சிவம் துணைக்கு வரும்!... உனக்கும் மாலை வரும்!...'' - மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார்.
ஓடங்கள் பயணித்தன. சில தினங்களாயின. ஆங்காங்கே ஊர் மக்களை நேரில் கண்டு அவர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களைக் கொண்டே ஆற்றின் கரைகளை செம்மைப்படுத்தி -

அவசர காலத்தில், உணவு, உறையுள், மருத்துவம், பாதுகாப்பு என - மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயிர் விளைந்து செழித்த நிலங்களுக்குமாக, எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு விரைவாகத் திரும்பினார்.  இதற்குள் மழையும் ஓய்ந்து விட்டது.
அரசருக்கு செய்தி அறிவிக்கும்படி - ஓலைதாங்கிகள் அனுப்பப்பட்டனர்.
திரும்பி வரும்போது - வடவாற்றின் படித்துறையில் - சில தினங்களுக்கு முன் கண்ட கோலத்திலேயே - அந்தத் துறவி அமர்ந்திருக்கக் கண்டனர். அச்சமும் வியப்பும் மேலிட்டது. ஆரவாரங்களினால் கண் விழித்த துறவியார் மீண்டும் கூறினார்.
''சிவம் துணைக்கு வரும்!... உனக்கும் மாலை வரும்!...'' - மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார்.
அமைச்சர் விரைந்து அரண்மனைக்குச் சென்றார். தஞ்சை வடக்கு வாசலில் பெருந்தோரணங்கள். எங்கும் ஆரவார - ஜயகோஷங்கள். என்ன விசேஷம்!... வியப்படைந்த  அமைச்சரை பட்டத்து யானை மாலையிட்டு வரவேற்றது.
மங்கல வாத்தியங்கள் முழங்கின.  அரசர் எதிர்கொண்டு நின்றார். அறிவிற் சிறந்த அமைச்சர் அல்லவா!.. விஷயம் விளங்கிற்று.  நாணம் கொண்டார்.

அரசரை வணங்கியபடி சொன்னார் - '' நான் என் கடமையைத்தான் செய்தேன்!'' 
அரசர் சொன்னார் - '' அதையும் செம்மையாய் செய்தீர்கள் அல்லவா!...''

பெருமதிப்புடைய நவரத்ன மாலையினை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
''செய்ததெல்லாம் குருநாதர்..'' - அன்று நடந்ததை அமைச்சர் விவரித்தார்.
அரசரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். வடவாற்றின் படித்துறையில் அதே நிலையில் குருநாதரைக் கண்டு தொழுது வணங்கினர். அனைவரையும் வாழ்த்தியருளினார் குருநாதர். மக்கள் வெள்ளமென வந்து அடி பணிந்தனர். அந்த மகானின் பார்வையினால் அனைவருக்கும் நலம் விளைந்தது.
மக்கள் அந்த மகானை '' பாவா '' என்று அன்புடன் அழைத்து அகமகிழ்ந்தனர். பின்னர் '' பஞ்சநத பாவா '' என்று அறியப்பட்டு,   பலகாலம் வீற்றிருந்தார்.
கலக்கமுற்றோருக்கும் கவலையுற்றோருக்கும் கதியற்றோருக்கும் - கரை காட்டும்  கலங்கரை விளக்காக, கருணையின் விளக்காகத் திகழ்ந்தார் மகான் பஞ்சநத பாவா. அவரை அண்டினோர் எல்லாரும் அல்லல் தீர்ந்து - ஆனந்த வசப்பட்டனர்.
எல்லோருக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்த - அந்த ஞானஒளியும் தன்னை ஒளித்துக் கொள்ளும் நாள் வந்தது. கண்ணீர் வெள்ளத்தில் மக்கள் வெள்ளம்.

அனைவருக்கும் நல்லாசி சுரந்த கருணையின் ஊற்று நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்தது. அப்படி ஆழ்ந்த நாள் மாசி மாதத்தின் அமாவாசை தினம். 
மகாசிவராத்திரியன்று தவநிலையில் -  சிவமாகப் பொலிந்த தவம், பொழுது விடிந்த வேளையில்,  விடிந்தது பொழுது என்று சிவநிலையினை எய்தியது.
நிர்விகல்ப சமாதியை நிலைப்படுத்தி சிவலிங்கம்  நிறுவினர்.

பாவா சிவயோகத்தில் அமர்ந்திருந்த படித்துறை
இன்றும்,  குருநாதர் பஞ்சநத பாவா ஸ்வாமிகள் -
கலக்கமுற்றோருக்கும் கவலையுற்றோருக்கும் கதியற்றோருக்கும் - கரை காட்டும் கலங்கரை விளக்காக, கருணையின் விளக்காகத் திகழ்கின்றார். அவரை அண்டினோர் எல்லாரும் அல்லல் தீர்ந்து - ஆனந்த வசப்படுகின்றனர்.

பூமிக்குக் கீழ் 15 அடி ஆழத்தில் உள்ள நிர்விகல்ப நிலை
இன்று (11.3.2013) மாசி அமாவாசை தினம். நம் குருநாதருக்கு ஆராதனை நாள்.

தஞ்சை மாநகரின்  ஒருபகுதியாக விளங்குவது வசிஷ்ட மகரிஷி சிவபூஜை நிகழ்த்திய பெருமையுடைய கரந்தை எனும் கரந்தட்டாங்குடி. கரந்தையில் பழைய திருவையாறு சாலையில் வடவாற்றின் கரையில் அமைந்துள்ளது குருநாதர் பஞ்சநதபாவா ஸ்வாமிகள் அருளும் நிர்விகல்ப சமாதி அதிஷ்டானம்.

குருநாதரின் கருணை விளக்கு கவலைகளை ஓட்டும். கலங்கரை விளக்காகக் கரை காட்டும்.  
'' பஞ்சநத பாவா திருவடிகள் சரணம்!...''

கொங்கணவர் பிரதிஷ்டை செய்த கொங்கணேசுவரர் ஆலயம்

 

கொங்கணவர் பிரதிஷ்டை செய்த கொங்கணேசுவரர் ஆலயம், தஞ்சாவூர் மேலவீதியில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. திருமணப் பேறு, மகப்பேறு வாய்க்காதவர்கள் மற்றும் செல்வம் வேண்டுவோர் கொங்கணவச் சித்தரிடம் கீழ்க்கண்டுள்ள பிரார்த்தனையை மேற்கொண்டால் அவை சித்திக்கும் என்பது, வழிபாடு செய்த பலன் கண்டவர்களின் நம்பிக்கை
ஆலய தரிசனத்தை ஒரு சுற்று முடித்துவிட்டு, கொங்கணவச் சித்தர் சந்நிதிக்கு வந்து அவர் சந்நிதியில் இடம் பெற்றுள்ள சுமார் 4 அடி உயரம் கொண்ட  365 தீப அலங்கார அடுக்கிலும் எண்ணெயிட்டு நிரப்பி, அதில் திரிகள் இட்டு  தீபம் ஏற்ற வேண்டும்.
அனைத்து தீபங்களும் ஒரே சமயத்தில் ஒளிர்விடும் நேரத்தில், ஆலய  அர்ச்சகர் கொங்கணவச் சித்தருக்கான அபிஷேகங்களைச் செய்வித்து, புத்தாடை அணிவித்து, அர்ச்சனையும் முடித்து முடிவில் தீபாராதனை  செய்வார். இத்தனையும்  365 தீபங்களும் எரியும் போதே செய்ய வேண்டும் என்பது ஐதீகம். விளக்கேற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கப் பெறுகிறார்கள்.
.
எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.

கொங்கண தேசத்தில் பிறந்தவர் என்பதால், கொங்கணர் என்று இவர் அழைக்கப்பட்டார் என்பர். அடிப்படையில் இவர், இரும்புக்கலம் செய்யும் ஆசாரிமார்களின் குடிவழியைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர். ஆசாரிமார்கள், பிரம்மனையும் விஸ்வகர்மாவையும் பிரதான தெய்வங்களாக வழிபடுபவர்கள். இவர்களின் குடும்பங்களில் தனித்தனியே குலதெய்வ வழிபாடுகளும் பிரதானமாக இருக்கும். கொங்கணர் குடும்பத்தில், சக்திவழிபாடு பிரதானமாக இருந்தது. கொங்கணரும் தொடக்கத்தில் அம்பிகை பக்தராகத்தான் திகழ்ந்தார். தாய்_தந்தையர்க்கு உதவியாக கலங்கள் செய்து பிழைப்பைக் கடத்தினார். காலாகாலத்தில் இவருக்குத் திருமணமும் நடந்தது... திருமணத்திற்குப் பிறகுதான், இவர் வாழ்வில் எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி, பேராசை மிக்க பெண்மணி. ‘தன் கணவன் கோடிகோடியாக சம்பாதிக்க வேண்டும், பொன்னும் மணியும் தன் வீட்டில் கொட்டிக் கொழிக்க வேண்டும்’ என்று விரும்பினாள். அப்படி சம்பாதிக்கத் துப்பில்லாதவர்கள், ஆணாயிருந்தாலும் அவர்கள் பேடிகளே என்பது போல எண்ணினாள். அவளது எண்ணம், கொங்கணரை மிகவும் பாதித்தது. அப்போது அவர் பார்க்க... சித்த புருஷர் ஒருவர் தங்கக்காசுகளை வரவழைத்தும், கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும் அற்புதம் செய்தார். கொங்கணர் விழுந்த இடம் இது. அந்த சித்தர் எப்படி அவ்வாறு சாதித்தார் என்று கேட்கப் போக, சித்த புருஷர்கள் மனது வைத்தால் ஒரு மலைகூட சருகாகி விடும் என்றும், அவர்கள் நீரில் நடப்பர், நெருப்பை விழுங்குவர், காற்றில் கரைவர் என்றும் அவர்களது பிரதாபங்கள் கொங்கணருக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதுவே, கொங்கணர் தானும் ஒரு சித்தயோகியாக வேண்டும் என நினைப்பதற்குக் காரணமாகிவிட்டது. கூடவே, சித்த யோகியானால் இரும்பைத் தங்கமாக்கலாம்; ஆசைப்பட்டதை எல்லாம் வரவழைக்கலாம் என்கிற எண்ணமும் சேர்ந்து கொண்டது. மொத்தத்தில், சித்த மார்க்கம் கொங்கணர் வரையில் மனிதன் கடைத்தேற உதவும் மகாமுக்தி மார்க்கமாக இல்லாமல், உலகின் சக்திகளை ஆட்டிப்படைக்க விரும்பும் ஒரு சக்தி மார்க்கமாகத்தான் தோன்றியது. இவ்வேளையில்தான், போகரின் தரிசனம் கொங்கணருக்குக் கிட்டியது. போகரின் காலில் விழுந்த கொங்கணர், தான் ஒரு தேர்ந்த சித்தனாகிட தனக்கு மந்திர உபதேசம் செய்யுமாறு வேண்டினார். ‘‘உபதேசம் செய்வது பெரிய விஷயமல்ல...! அதைப் பின்பற்றி தவம் செய்வதில்தான் எல்லாம் இருக்கிறது’’ என்றார், போகர். ‘‘நானும் தவம் செய்வேன் ஸ்வாமி..!’’ ‘‘தவம் புரிவது என்பது, உயிரை வளர்க்கும் செயல் போன்றதன்று. அதற்கு நேர் மாறானது. தான் என்பதே மறந்து, உபதேசம் பெற்ற மந்திர சப்தமாகவே தன்னை ஆக்கிக் கொள்ளும் ஒரு செயல்.’’ ‘‘தங்கள் சித்தப்படியே நான் என்னை மறந்து தவம் செய்வேன் ஸ்வாமி!’’ ‘‘தன்னை மறப்பது அவ்வளவு சுலபமல்ல அப்பனே.... உன் ஜாதகக் கணக்கு அதற்கு இடம் தரவேண்டும். ஏனென்றால், வினைவழி கர்மங்களால்தான், மானுடப் பிறப்பெடுக்கிறோம். அந்தப் பிறப்புக்கென்று எவ்வளவோ கடமைகள் இருக்கின்றன. நீ விரும்பினாலும் அவை உன்னை மறக்கவிடாது..... ஒருவேளை அந்தக் கணக்கை நீ வாழும் நாளில் தீர்க்க இயலாவிட்டால், உன் பிள்ளைகள் அந்தக் கணக்கை நேர் செய்ய வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கணக்கு எப்படிப்பட்டது என்றும் ஒருவருக்கும் தெரியாது. அந்தக் கணக்கு தீராமல் நீ சித்தனாக முடியாது....’’ ‘‘எந்த வகையில் அந்தக் கணக்கை அறிவது? எப்படி அதை நேர்செய்வது?’’ ‘‘தவத்தில் மூழ்கு.... தவம் கலையாமல் தொடர்ந்தால், அந்தக் கணக்குகளில் பாக்கி எதுவும் இல்லை என்று பொருள். தவம் தடைபட்டால், அந்தக் கணக்கு தன்னை நேர்செய்து கொள்ள உன்னை அழைக்கிறது என்று பொருள்...’’ ‘‘இப்படித்தான் நாம் உணர முடியுமா...? வேறு வழிகள் இல்லையா?’’ ‘‘பஞ்சபூதங்களை ஒன்றாக்கிப் பிசைந்தால் வருவதுதான் இந்த தேகம். அதே பஞ்ச பூதங்களால்தான், பின் இது வளர்ந்து பெரிதாகிறது. மெல்ல மாயை வயப்பட்டு, புலன்களுக்குப் புலப்படுவதை மட்டுமே இருப்பதாகவும், புலனாகாததை இல்லாததாகவும் இது கருத ஆரம்பித்து விடுகிறது. உன் கேள்வியும் கூட அப்படி மாயையில் வீழ்ந்த ஒரு மனிதன் கேட்பது போல்தான் இருக்கிறது. பல விஷயங்களை இந்த உலகில் நாம் சூட்சுமமாகத்தான் உணர முடியும். பச்சைப் பசேல் என்று ஒரு நிலப்பரப்பு கண்ணில் பட்டால், அங்கே நிலத்தடியில் நீர் வளம் சிறப்பாக இருப்பதாக உணரலாம். மரம் முழுக்க கனிகள் கொழித்துக் கிடந்தால், மரத்தின் ஆணிவேர் பலமாக இருக்கிறது என்று உணரலாம். மரத்துக்குக் கீழே தோண்டிப் பார்த்துதான் அறிய வேண்டும் என்கிற அவசியமில்லை. உன் கர்மக் கணக்கு எப்படி என்று அறியவும், தவம்தான் வழி... தவம் செய்! தவம் ஒன்றுதான் மாயையை வெல்லும் வழி. மாயைக்கும் தவத்துக்கும் நடுவில் நடைபெறும் யுத்தத்தில், எது வலுமிக்கதோ அது வெற்றிபெறும். நீ நல்வினைகள் புரிந்திருந்தால், உன் தவம் வலுவானதாக இருக்கும்... தீவினைகள் புரிந்திருந்தால், மாயை வலுவானதாக இருக்கும். எது வலுவானது என்பதை, களத்தில் இறங்கிப் பார்த்து தெரிந்துகொள்...!’’ _ என்ற போகரின் உபதேசம், கொங்கணரை தவத்தில் மூழ்க வைத்தது. அந்தத் தவத்தின் பயனாக, அரும்பெரும் சித்தர்கள், முனிவர்களின் தரிசனம் அவருக்குத் தொடர்ச்சியாகக் கிட்டத் தொடங்கியது. போகர் அழுத்தமாகக் கூறியதன் எதிரொலி, தவத்திற்கு இடையூறு வந்த போதெல்லாம் அவரை எச்சரித்து, தவத்தைத் தொடர வைத்தது. ‘‘மாயை என்னை மயக்கப் பார்க்கிறது. நான் மயங்கமாட்டேன்.. மயங்கமாட்டேன்...’’ _ என்ற கொங்கணர், சிலைபோல அமர்ந்து தவம் புரியலானார். ஆடாமல் அசையாமல் அமர்ந்து தனக்குள் சப்தரூபமாகிய மந்திரத்தை மட்டுமே விளங்க வைக்கும் ஒருவரை கோள்களாலும் எதுவும் செய்யமுடியாது. எனவே, கோள்கள் கொங்கணர் வரையில் செயலிழந்து நின்றன. அதேசமயம், செயல்பட்டு கொங்கணரைச் சாய்ப்பதற்கு வேறு வழியைத் தேடத் தொடங்கின. அதில் ஒன்று, யாகம் வளர்ப்பது என்பது...! ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நலம்பெற விரும்பினால் அவன் இறையருளையும், சில வரங்களையும் பெற்றிட வேதம் காட்டியுள்ள ஒரு வழிமுறைதான் யாகம், ஹோமம். ஒருவன், ஊருக்குப் பொதுவாய் நலம் வேண்டிச் செய்வது யாகம்; தனக்காக ஒருவன் செய்து கொள்வது ஹோமம்.... யாகமும் ஹோமமும் குறைவற நிறைவேற்றப்பட்டால், அதைப் புரிந்தவர்களுக்கு அவர்கள் கோரிய பலனை அது அளித்தே தீரும். உலகில் எல்லா நலன்களுடனும் வாழ விரும்புகின்றவர்கள்தான் இவற்றைப்புரிவார்கள். பற்றற்றவர்கள் இதன் பக்கமே வரமாட்டார்கள். யாக பலன்களை வரமாக வாங்கிக் கொண்டு அதை மண்ணில் வாழ்ந்து பயன்படுத்திப் பயன்படுத்தி மகிழும் ஒருவாழ்க்கை, லௌகீக மனிதர்களுக்குச் சரியானதாக இருக்கலாம். துறவிகளுக்கு எதற்கு அது? இருந்தும், சில துறவிகள் யாகம் வளர்த்து வரங்களைப் பெற்ற கதைகளை அறிவோம். அதே சமயம், அப்படிப் பெற்ற வரங்களாலேயே அவர்கள் பாடாய்ப்பட்டதையும் சேர்த்தே அறிவோம். உதாரணத்திற்கு, விசுவாமித்திரர் ஒருவர் போதுமே...! இப்படி யாகம், ஹோமம் செய்து உரிய பலன்கள் பெறுவதை கொங்கணரும் இடையில் அறிந்து கொண்டபோது, அவரது புத்தி மெல்ல மாறியது. காலமெல்லாம் அமர்ந்து தவம் செய்து பெறும் பயன்களை விட இதில் வேகமாக பயன் பெற்றுவிட வழி இருப்பதாக அறிந்தவர், தவத்தை விடுத்து யாகத்துக்கு மாறிவிட்டார். அவரது மாயை அவரை அப்படி எண்ண வைத்து அவரை ஆட்டிவைக்கப் பார்த்தது. இருப்பினும் அவர் செய்த அளவிற்கான தவப்பயன், கௌதம மகரிஷி வடிவில் அவரை நேர்படுத்த முயன்றது. பஞ்ச ரிஷிகளில் கௌதமர் முக்கியமானவர். அவர், கொங்கணர் திசை மாறுவதை உணர்ந்து அவரை எச்சரித்தார். ‘‘சித்தனாக விரும்பினால், நீ சொல்வதை சித்தம் கேட்க வேண்டும். சித்தம் சொல்வதை நீ கேட்கக் கூடாது... யாகம், ஹோமம் எல்லாம் பெரும்துன்பத்தில் இருப்பவர்கள் அருள்சக்தி பெற்று உய்வடைய பயன்படுத்தும் குறுக்கு வழிமுறைகள். உனக்கு எதற்கு அது? உபதேச மந்திரத்தால் தவம் செய்வதே உன் வரையில் உற்ற செயல்’’ _ என்று கௌதமர் கொங்கணரை ஒருமுறைக்குப் பலமுறை நேர்படுத்தினார். இப்படி கொங்கணர் அப்படியும் இப்படியுமாக தடுமாறினாலும், இறுதியில் தவத்தின் பெருமையை உணர்ந்து, பெரும் தவசியாகி, அதன்பின் குண அடக்கம் பெற்றார். ‘நான் ஒரு தவசியே இல்லை.... நான் தவசியாக வேண்டுமானால் என்னையே மறக்க வேண்டும். எனக்கு என்னை நன்றாகத் தெரிகிறது எனும்போது, நான் எப்படி தவசியாவது...? ஒருவேளை, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நான் தவசியாகக் கூடும்!’ என்று அவர் தனக்குள் தன்னடக்கத்தோடு சிந்திக்க ஆரம்பித்த பிறகே, அவருக்குள் ஒரு பரிபூரணத்தன்மை நிறையத் தொடங்கியது. மொத்தத்தில், கொங்கணர் வாழ்க்கை என்பது, மானுடர்களுக்கு தவத்தின் சக்தியை உணர்த்தும் ஒரு வாழ்க்கையாக ஆகிவிட்டது. இவர் வாழ்வில், பல ரசமான சம்பவங்களுக்கும் பஞ்சமில்லை. கொங்கணரைப் பற்றி நினைக்கும்போது, ஒரு கொக்கின் நினைப்பும் எப்போதும் சேர்ந்தே வரும். கொங்கணர் யாகம் வளர்த்து அதற்குரிய பலன்களால் தன்னை பல அரிய செயல்களுக்கு கர்த்தாவாக வைத்துக் கொண்டிருந்த நாளில் நடந்த சம்பவம் இது. அவர் பார்த்தாலே பச்சை மரமும் பற்றி எரியும். அப்படி ஒரு சக்தியுடன் ஒருநாள் தெருவில் நடந்தபடி இருந்தவர் மேல், வானில் பறந்து கொண்டிருந்த கொக்கானது எச்சமிட்டுவிட்டது. அவ்வளவுதான்... அதை கொங்கணர் கோபத்துடன் பார்க்க, அது எரிந்து சாம்பலானது. கொங்கணரிடமும் ஒரு பெருமிதம். ‘‘நான் மாபெரும் தவசி.. என் மேலா எச்சமிட்டாய்?’’ என்பது போல ஒரு கர்வப் பார்வை வேறு.... ஜீவன் முக்தர்களுக்கு துளியும் ஆகாத விஷயம், கோபமும் கர்வமும்... மாயை இந்த இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டுதான், ஜீவன் முக்தர்களையே ஆட்டி வைக்க முயற்சி செய்யும். துர்வாசரின் கோபம் மிகப்பிரசித்தம். அதனால் அவர் பட்டபாடும் கொஞ்ச நஞ்சமல்ல.. விசுவாமித்திரரின் தாழ்வுமனப்பான்மையும் அதன் எதிரொலியான கோபமும்தான் அவரை திரிசங்கு சொர்க்கம் அமைக்கவே தூண்டியது. இவர்கள் எல்லாம் மானுட வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு உதாரணங்களானார்கள். ஆனால் இவர்களிடையே, தன்னையே தாழ்த்திக் கொண்டு தன்னை ஜடமான கல் மண்ணாகக் கருதிய ஆழ்வார்கள், சுலபமாக நித்யமுக்தி பெற்றார்கள். ‘படியாய்க் கிடந்து உன் பவழவாய் காண்பேனோ’ என்று ஆழ்வார் ஒருவர், இறையை அனுதினமும் அனுபவிக்க, அந்த ஆலயத்துச் சன்னதியின் வாயிற்படி ஆகக்கூடத் தயார்... அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! என்றார். ‘நான்’ என்பது நீங்கி மமதை விலகிடும்போது, எல்லாமே வசப்படுகிறது. அல்லாதவரையில், எத்தனை பெரிய தவசியாக இருந்தாலும், மாயை அவர்களை விடுவதில்லை. கொங்கணரையும் அது அவ்வப்போது ஆட்டிவைத்து தலையில் குட்டியது. கொக்கை எரித்த கோபத்தோடு அடுத்து அவர் யாசகம் கேட்டுச் சென்று நின்ற இடம் திருவள்ளுவர் வீடு. அப்போது வள்ளுவருக்கு வாசுகி பணிவிடை செய்தபடி இருந்தாள். கற்புக்கரசிகளான நளாயினி, கண்ணகி, சீதை போன்றவர்களுக்கு ஒரு மாற்றுக் கூட குறையாதவள், வாசுகி. கொங்கணர் யாசகம் கேட்டு, சற்று தாமதமாகவே வாசுகி அவருக்குப் பிச்சை இடும்படி ஆனது. காரணம், அவளது பணிவிடை. இது புரியாத கொங்கணர், ‘உனக்குத்தான் என்ன ஒரு அலட்சியம்...’ என்று வாசுகியை எரிப்பது போல பார்த்தார். ஆனால், வாசுகிக்கு எதுவும் ஆகவில்லை. மாறாக அவள் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து ‘கொக்கென்று நினைத்தாயோ... கொங்கணவா?’ என்று திருப்பிக் கேட்க, ஆடிப்போய் விட்டது கொங்கணனின் தேகம். வாசுகியால் எப்படித் தன்னையறிய முடிந்தது? இது முதல்கேள்வி. எப்படி தன் தவப்பயன் அவளை மட்டும் எரிக்கவில்லை? இது அடுத்த கேள்வி. அதற்கு விடை பிறகுதான் அவருக்கு விளங்கியது. ஹோமம் வளர்ப்பது, யாகம் புரிவது, தவம் செய்வது அனைத்தையும் விட மேலான ஒரு செயல், தானென்ற அகந்தை துளியும் இன்றி பணிவிடை புரிவது, தனக்கென வாழாமல் இருப்பது என்பதே அது! அந்த நொடி கொங்கணருக்கு தன் தவச் செயலால் உருவான கர்வம் தூள்தூளாகிப் போனது. ஒரு பதிவிரதை முன்னால் நூறு தவசிகளும் சமமாகார் என்பதையும் விளங்கிக் கொண்டார். இப்படி, கொங்கணர் அனுபவத்தால் அறிந்ததும் ஏராளம். தன் சத்குருவான போகருக்கு ஒருமுறை ஒரு பெண்மேல் பிரேமை ஏற்பட்டது... ஆனால் அவளோ அவருக்கு வசப்படாமல் போனாள். போகர் வருந்தினார். இதை அறிந்த கொங்கணர் ஒரு அழகிய சிலையை அவர் விரும்பும் பெண்ணாக்கி போகர் முன் சென்று நிறுத்தினார். ‘கல்லுக்கே உயிர் கொடுக்கும் அளவு உங்கள் சிஷ்யன் தவசக்தி மிக்கவன்’ என்று சொல்லாமல் சொல்ல, போகர் சிரித்து விட்டார். ‘‘இப்படி ஆக்கிக்கொள்ள எனக்குத் தெரியாதா... மாயையில் வந்தது மாயையிலேயே செல்லும்’’ என்று உரைத்த போகர், தன் மனதைக் கவர்ந்த பெண்ணிடம் அழகைக் கடந்த பல அம்சங்கள் இருந்ததைக் குறிப்பிட்டு, ‘‘அதை உன்னால் இப்பெண்ணுக்குள் ஏற்படுத்த முடியுமா?’’ என்று கேட்க, கொங்கணர் சூட்சுமம் அறிந்தார். கொங்கணர் வாழ்வில் இப்படி பலப்பல பாடங்கள். காலப்போக்கில் இரும்பைத் தங்கமாக்குவதில் இருந்து குளிகைகள் செய்வது வரை எவ்வளவோ கற்றார். ஒருமுறை, சிவலிங்கம் ஒன்றின்மேல் பூப்போட்டு வணங்குவது போல குளிகையைப் போட்டு வணங்கினார். அந்தக் குளிகை பொடிந்து பூசிக் கொள்ளும் நீறாகாமல் அப்படியே ஆவியாகி விட்டது. அது, குளிகைக்கு நேர்மாறான செயல்! அங்கே அவ்வாறு ஆகவும், இறைவன் தனக்கு எதையோ உணர்த்த விரும்புவதைப் புரிந்து கொண்டு, அங்கேயே தவம் செய்து, ‘குளிகையை மலரினும் மேலாகக் கருதி அதை லிங்கத்தின் மேல் வைத்தது தவறு’ என்பதை உணர்ந்தார். அப்படி உணர்ந்த நொடியில் அக்குளிகை திரும்ப அவருக்குக் கிட்டியது. சில குளிகைகள், வைக்கப்படும் இடத்தில் கல்லோ மண்ணோ இருந்தால், அதை சாம்பலாக்கி விடும். அவ்வளவு உஷ்ணமானவை. லிங்கத்தையே கூட தன் குளிகை சாம்பலாக்கும் என்று காட்ட கொங்கணர் முயன்றார். ஆனால், தோற்றார் என்றும் கூறுவர். கொங்கணர், தம் வாழ்நாளில் கௌதமர், போகர், திருமாளிசைத் தேவர், திருமழிசையாழ்வார் என்று பல சான்றோர்களை தரிசித்து, பலவிதங்களில் ஞானம் பெற்றதை அறிய முடிகிறது. தஞ்சையில் பிரத்யேகமாக ஒரு சிவலிங்கத்தை தனது பூஜைக்கென்றே உருவாக்கி, இறுதிவரை பூஜித்து வந்ததாகவும் தெரிகிறது. அபிதான சிந்தாமணி, இவரை அகத்தியரின் மாணாக்கர் என்கிறது. இவர் எழுதிய நூல்கள் கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் ஆகியவையாகும்.

கொங்கணர் நூல்கள்

கொங்கணர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

நூல்கள்

 • தனிக்குணம் 200
 • வாத சூத்திரம் 200
 • வாத காவியம் 3000
 • வைத்தியம் 200
 • சரக்கு வைப்பு 200
 • முக்காண்டங்கள் 1500
 • தண்டகம் 120
 • ஞான வெண்பா 49
 • ஞான முக்காண்ட சூத்திரம் 80
 • கற்ப சூத்திரம் 100
 • உற்பக்தி ஞானம் 21
 • முதற்காண்ட சூத்திரம் 50
 • வாலைக்கும்மி 100
 • ஆதியந்த சூத்திரம் 45
 • நடுக்காண்ட சூத்திரம் 50
 • முப்பு சூத்திரம் 40
 • ஞான சைதண்யம்109
 • கடைக்காண்ட சூத்திரம் 50